வாசகர்களுக்கு 63-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
உங்களுக்காக இந்தியாவின் முதல் சுதந்திர தின நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள்
2 comments August 15, 2009
சீர்காழி சதி வழக்கு-பாகம் – 2
இதைப் பற்றி பேசுவதற்காக, சேஷு ஐயரும், ராமரத்தினம், கிருஷ்ணமூர்த்தி மூவரும் சீர்காழிக்குச் சென்று அவ்வூரில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த ரகுபதி ஐயரின் குமாரனும், துடிப்பும், தேசபக்தியும், வீரமும் ஒருங்கே பெற்ற காங்கிரஸ்காரராக விளங்கிய சுப்பராயனைச் சந்தித்தனர். வந்த அன்பர்கள் சுப்பராயனிடம் தங்கள் திட்டத்தை விளக்கி அதைச் செயல் படுத்தும் விதம் குறித்து விவாதித்தனர். இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுப்பராயன், தனது உள்ளூர் நண்பர்களிடமும் இதுபற்றி பேசி, விவாதித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறினார். தினமணி ராமரத்தினமும், கணேசனும் சென்னை திரும்பிவிட்டனர். சில தினங்களுக்குப் பிறகு சுப்பராயனிடமிருந்து ராமரத்தினத்துக்கு ஒரு கடிதம் வந்தது. ராமரத்தினத்தை டைனமைட்டுடன் சீர்காழி வரும்படி கேட்டுக் கொண்டிருந்தது அந்தக் கடிதத்தில். உடனே ராமரத்தினம் அவ்விதமே டைனமைட் குச்சிகளுடன் சீர்காழி சென்று அவற்றை சுப்பராயனிடம் கொடுத்துவிட்டு, அவர்களது திட்டம் என்ன, எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, திட்டம் செயல்படப்போகும் விதம் குறித்து திருப்தி தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பினார்.
சீர்காழி இரகுபதி ஐயரின் குமாரரும், பின்னாளில் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிருவனத்தை நிருவி பெரும் புகழோடு விளங்குபவருமான, சுப்பராயன் தனது சீர்காழி நண்பர்களான வெங்கட்டராமன், வெங்கடேசன், சுப்பிரமணியன் ஆகியவர்களுடன் திட்டம் குறித்து விரிவாக விவாதித்து, சீர்காழி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள உப்பனாறு பாலத்தைத் தங்கள் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டனர். இந்த உப்பனாற்றுக்கு சுக்கனாறு என்று பெயர். இனி அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும், தேவைப்படும் சாதனங்களையும் சேகரிக்கத் தொடங்கினர். நாடு முழுவதும் பாலங்களைத் தகர்க்கும் பணி மும்முரமாக நடந்து வந்ததால், இரயில் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு மைல் தூரத்திற்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர். இரயில் தண்டவாளங்கள், பாலங்கள் இவைகளில் எவரும் வெடி வைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.
இந்த இளைஞர் குழுவில் அதி தீவிரவாதிகளாகவும், உறுதியும் துணிச்சல் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள் இருவர். அவர்கள் வெங்கடேசனும், சுப்பிரமணியனும் ஆவர். இவர்கள் இருவரும் திட்டம் உருவானவுடனேயே அதைச் செயல்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாயினர். தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் இவர்கள் எழுந்து விடுவார்கள். அக்கம் பக்கத்திலோ, அல்லது வழியிலோ யார் கண்ணிலும் பட்டுவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருவரும் உப்பனாறுக்குச் செல்வார்கள். கையில் ஒரு பையில் துளைபோடும் இயந்திரம் முதலான உபகரணங்களை எடுத்துச் செல்வார்கள். அங்கு போய் ஒருவர் ஆற்றில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு, ரயில்வே பாலத்தின் தூணில் துளை போடுவார். மற்றவர் பாலத்தின் மீது நின்று கொண்டு யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி யாரும் கண்ணில் தென்பட்டால் உடனே மற்றவரை எச்சரித்து, இருவரும் அந்த இடத்தை விட்டு அந்தர்தியானம் ஆகிவிடுவார்கள். இந்த வேலையை இருவரும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். இப்படி இவர்கள் கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் வரை தினமும் தொடர்ந்து செய்து வந்தனர். ஒரு வழியாக துளையிடும் வேலை முடிந்தது. இதுவரை எந்தவித அபாயமான சூழ்நிலையும் தோன்றாதபடி வேலையைக் கச்சிதமாக செய்து முடித்து விட்டனர். இனிமேல்தான் இவர்கள் செய்யவேண்டிய, ஆபத்தானதும் மிகவும் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டியதான வேலைகள் இருக்கின்றன. சுவற்றில் போட்ட துளையில் டைனமைட்டைப் பொறுத்தி, அதில் திரியை இணைத்து, அது கீழே உள்ள நீரில் விழுந்து நனைந்து விடாமல் இருக்க திரியோடு ஒரு குடைக்கம்பியை இணைத்துக் கட்டி நீட்டிக் கொண்டிருக்கும்படி வைத்தனர்.
திரி நீளம் அதிகம் இல்லாமல் இருந்தாலும், நீர் நிரம்பிய இடம் என்பதால் பத்த வைத்தவுடன் உடனே ஓடி மறைவது சிரமம் என்பதாலும், பற்ற வைத்த பிறகு ஓடிவிட போதிய நேரம் தரும் வகையில் அந்தத் திரியை எண்ணெயில் நனைத்து திரி மெதுவாக எரியும்படி செய்து கொண்டனர். இப்போது திட்டப்படி எல்லா ஏற்பாடுகளும் தயார். திரியைப் பற்ற வைக்க வேண்டியதுதான், மெயின் லைனில் உள்ள அந்த பாலம் வெடித்துச் சிதற வேண்டியதுதான், வெள்ளை அரசாங்கம் ஆடிப்போகப் போகிறது. இந்த இளைஞர்கள் பாலத்தில் வெடிகுண்டுகளை வைத்து, திரிகளையும் தயார் செய்து, திரிக்கு தீ வைக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டு, போலீசாரோ அல்லது மற்றவர்கள் கண்ணிலோ படாமல் ஓடிப்போய் புதர்களுக்கிடையில் மறைந்து கொண்டனர். அந்த நேரம் பார்த்து ரயில் தண்டவாளங்களைப் பாதுகாக்கும் போலீஸ் பார்ட்டி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது பாலத்தடியில் வைக்கப்பட்டிருந்த குண்டும், அதன் திரி குடைக்கம்பியோடு நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி விட்டு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். பாலத்துக்கு சேதம் இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை மிகப் பெரிய நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டது. உப்பனாற்றுப் பாலத்துக்கு யாரோ வெடி வைத்து விட்டார்கள் என்று ஊரெங்கும் பரபரப்பு.
போலீஸார் சிண்டைப் பிய்த்துக் கொண்டு புலன் விசாரிக்கத் தொடங்கினர். அங்கு இங்கு சுற்றி அலைந்து தகவல்களைத் திரட்டி, இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டனர். பலரை அழைத்துச் சென்று அவர்கள் பாணியில் விசாரித்தனர். இதில் பங்கு பெற்ற யாரும் கொன்று போட்டாலும் வாயைத் திறக்காத உறுதி படைத்தவர்கள். எங்கு இவர்களுக்கு புக இடம் கிடைத்ததோ தெரியவில்லை, இதைத் தொடர்ந்து போலீஸ் சுறுசுறுப்படைந்தது. இந்த காரியத்தைச் செய்யக்கூடியவர்கள் சீர்காழி பகுதியில் யார் என்று விசாரித்து, அன்று இரவே சுப்பராயன் வீட்டைச் சோதனையிட வந்து சேர்ந்தார்கள். அங்கு சுப்பராயனைக் கைது செய்து கொண்டு, அவருடைய நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த கே.எஸ்.வெங்கட்டராமன், வி.சுப்பிரமணியன், ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விசாரணை செய்ததை அடுத்து சென்னையில் தினமணி என்.ராமரத்தினம், டி.வி.கணேசன் ஆகியோரையும், கணேசனின் அண்ணன் வி.சேஷு ஐயர், கிருஷ்ணய்யர், ஜே.வெங்கடேஸ்வரன் முதலியவர்களையும் அவரவர்கள் ஊரில் இவர்களைப் பிடித்து கைது செய்து வழக்கு தொடுத்தனர். இவர்கள் மீது அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்ததாகவும், அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், உப்பனாறு பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட தேசபக்தர்கள் அனைவரும் சீர்காழி தாலுக்கா சிறையில் ஆறு மாத காலம் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் செங்கல்பட்டு விசேஷ (செஷன்ஸ்) நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் இதற்கென்று இயற்றப்பட்டதல்லவா? அந்த சட்டத்தின்படி தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்தனர்.
விசாரணை தொடங்கும்போதே போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி சேஷு ஐயர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கின் முடிவில் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தியும், டி.வி.கணேசனும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவரை மட்டும் பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைத்தனர். மற்ற எதிரிகளான தினமணி என்.இராமரத்தினம் அவர்களுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இரகுபதி ஐயரின் புதல்வரும், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபருமான தொழிலதிபர் சுப்பராயனுக்கு ஐந்து வருஷம் சிறை, வெங்கட்டராமனுக்கும், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணியனுக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்கள் பெல்லாரியில் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் விசாரணையின்போது ராமரத்தினம் பத்து மாத சிறை தண்டனையோடு விடுதலை செய்யப்பட்டார். எனினும் 1944இல் பிரிட்டிஷ் அரசு இவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து ஆறு மாதம் சிறையில் அடைத்தது. ஆறு மாதம் கழித்து விடுதலையான இவரை மறுபடி 1945இல் அரசாங்கம் கைது செய்து ராஜத்துவேஷ வழக்கு தொடர்ந்தது. உயர்நீதி மன்றத்தில் இவர்கள் செய்த மேல் முறையீட்டில் இவர் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலையானார். சுப்பராயனும், இதர தேசபக்தர்களும் 1946ஆம் ஆண்டில் டி.பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சரானபோது விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை எந்த அவசரச் சட்டத்தின் கீழ் விசாரித்து தனி நீதிமன்றத்தில் தண்டனை அளித்தார்களோ, அந்தச் சட்டம் செல்லாது என்று உயர் நீதி மன்றத்தில் ஓர் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்த அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கை சாதாரண கிரிமினல் சட்டப்படியே விசாரிக்கலாம் என்று உயர்நீதி மன்றம் கூறிவிடவே, வேறு வழியில்லாமல் இவர்கள் மீது திரும்பவும் விசாரணை தொடங்கியது. இதில் சுப்பராயன் அவர்களும், வெங்கட்டராமன், சுப்பிரமணியன், வெங்கடேசன் ஆகியோர் மட்டும் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றனர், மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நடந்த காலத்தில் இதன் விசாரணை விவரங்களை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். காரணம் இதில் சம்பந்தப்பட்டவர்கள், மிக பிரபலமான பத்திரிகையாளர்கள், தொழிலதிபர் மற்றும் நன்கு படித்த இளைஞர்கள் என்பதால். வழக்கில் 5ஆவது எதிரியான டி.வி.கணேசன் சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பத்திராதிபர் ராம்நாத் கோயங்கா, தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், தினமணி உதவி ஆசிரியர் வெங்கட்டராஜுலு நாயுடு ஆகியோர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் கணேசன் விடுதலை செய்யப்பட்டாலும், பிரிட்டிஷ் அரசுக்கு இவர் மீது ஒரு கண் இருந்தது. இவர் மிக பயங்கரமான புரட்சிக்காரர் என்பது அவர்களது கணிப்பு. ஆகையால் மறுபடியும் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சுமார் எட்டு மாத காலம் சிறை வைக்கப்பட்டிருந்தார். இரண்டாவது எதிரியான சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்றாலும், சிறை தண்டனை பெற்றார். நாட்டுக்காக தனது சொந்த சுக போகங்களையும் மறந்து இவர் செய்த தியாகம் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய செய்தி. இவர் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிருவனத்தைத் தொடங்கி பெரிய தொழிலதிபராகி அந்த ஊரிலேயே வாசம் செய்யலானார். திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் போன்ற பல பொது அமைப்புக்களில் இவர் பொறுப்பு வகித்து சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தார் என்பது நமக்கெல்லாம் நிறைவு தரக்கூடிய செய்தி. இவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று இவரது தந்தையார் ரகுபதி ஐயர் விரும்பினார் ஆயினும், காந்திஜியின் ஆன்ம பலம் வழிகாட்டியதால் திரு சுப்பராயன் சற்றும் அசைந்து கொடுக்காமல் தனது தண்டனை காலத்தை அனுபவித்தார் என்பது அவர் நினைவை தமிழகம் என்றென்றும் போற்றி நினைவில் நிறுத்த வேண்டும். வாழ்க சீர்காழி சதி வழக்குத் தியாகிகள், வளர்க அவர்களது புகழ்!
அன்புடன்
- கோபாலன் வெங்கட்ராமன்
Add comment August 15, 2009
சீர்காழி சதி வழக்கு-பாகம்-1
தமிழகத்தில் 1942 ஆகஸ்ட் புரட்சியின்போது தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு அடுத்ததாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவது இந்த சீர்காழி சதி வழக்கு. 1942 ஆகஸ்ட்டில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானமும், அதனையடுத்த தேசத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையும் தொடர்ந்து வடநாடு முழுவதும் தீவிரமான போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாடு அவர்களுக்குப் பின் தங்கியது இல்லை என்று கூறும் வகையில் இங்கும் பல தீவிரவாதப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடக்கத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வந்த காங்கிரசார்களை, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளைக்காரனின் பேச்சு விழித்து எழச்செய்து விட்டது.
இரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடொன்றில் பேசுகையில் சென்னை கவர்னர் “இந்தியாவின் இதர பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், இரயில்வே பாலங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகள் நடைபெற்று வரும்போது, சென்னை மாகாணம் மட்டும் அப்படிப்பட்ட நாச வேலைகள் எதுவும் நடைபெறாமல் அமைதியாகவே இருக்கிறது என்பது சென்னை மாகாணத்துக்குப் பெருமை, ஆகவே இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி” என்று கூறினார். இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதைப் படித்த தேசபக்தர்களுக்கு, கவர்னரின் பேச்சு ஒரு சவாலாக இருந்தது போலும். ஓகோ! வட இந்திய மக்களைப் போல தென்னிந்திய மக்கள் தேச உணர்வில் பின் தங்கியவர்கள் என்பது போல அல்லவா இவர் பேசியிருக்கிறார். நம் தேசபக்தியையும், வட இந்திய மக்களைப் போலவே நாமும் காண்பித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது போலும். சென்னை மாகாண கவர்னரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து சென்னை மாகாணம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இவைகள் தோன்றலாயின.
அந்த வரிசையில் சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம். சீர்காழிக்கு அருகில், புகைவண்டி நிலையத்திற்கு மிக அருகில் ஒரு உப்பனாறு உண்டு. அந்த உப்பனாற்றின் மீதுள்ள ரயில்வே பாலத்திற்கு வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டி 8 பேர் மீது இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்குதான் சீர்காழி சதி வழக்கு என்று பெயர் பெற்றது.
அந்த எட்டு பேரின் பெயர்கள் வருமாறு:-
1. சென்னை தினமணி உதவி ஆசிரியர் என்.ராமரத்தினம்.
2. சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபர் ஆர்.சுப்பராயன்
3. கும்பகோணம் பந்துலு ஐயரின் முதல் மகன் வி.சேஷு ஐயர்
4. அவந்திபுரம் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி
5. கும்பகோணம் பந்துலு ஐயரின் 3ஆவது மகன் டி.வி.கணேசன், தினமணி உதவி ஆசிரியர்.
6. சீர்காழி வெங்கடேசன்
7. சீர்காழி வெங்கட்டராமன்
8. சீர்காழி சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் பல படித்த தேசபக்தி மிகுந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் கொண்டனர். எத்தனை தலைவர்கள், அத்தனை பேரும் அஹிம்சை, சத்தியம் என்று தங்கள் போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்கள். அவர்களைப் பிடித்து எங்கிருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை செய்யும் இந்த வெள்ளை அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினர். இவர்களோடு தேசபக்த பாமர மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தனர். அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்வதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றிய சிந்தனையே அந்த இளைஞர்களுக்கு இல்லை. நம் நாடு, நம் மக்கள், நம் தலைவர்கள், நமக்கு சுதந்திரம், அடக்குமுறையைக் கையாளும் வெள்ளையனுக்கு சரியான பாடம் இதுதான் அவர்கள் மனதில் ஓடிய எண்ண அலைகள். அப்படிப்பட்ட தியாக மனம் படைத்த தஞ்சை மாவட்ட படித்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செயல்படத் துடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நாளில் மிகப் பிரபலமான பத்திரிகைகளாக விளங்கிய, ஆங்கில ஏடு “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்”, தமிழ் நாளேடு “தினமணி” இவற்றின் அதிபராக விளங்கியவர் திரு. இராம்நாத் கோயங்கா என்பவர். அந்த பத்திரிகைகளில் தினமணியில் பணியாற்றியவரும் பின்னர் அதன் ஆசிரியராகவும் இருந்தவர் மேதை திரு ஏ.என்.சிவராமன் அவர்கள். இவர்களோடு தினமணி என்.இராமரத்தினம் ஆகியோர் ஒன்று கலந்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதியிலுள்ள ஏதாவதொரு பாலத்துக்கு வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்கு முதலில் வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொள்ள வேண்டுமே, என்ன செய்வது? இராம்நாத் கோயங்காவுக்கு நாடு முழுவதிலும் நல்ல செல்வாக்கு உண்டு. அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி கோயங்காவும், சிவராமனும் ஆந்திரா, ஒரிசா எல்லையிலுள்ள செல்லூர் எனும் இடத்துக்கு ரகசியமாகச் சென்று அங்கிருந்த மைக்கா சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலருக்குப் பணம் கொடுத்து, அவர்கள் சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டுக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். ஒரு டைனமைட் என்பது சாக்பீஸ் அளவுக்கு இருக்கும்.
இந்த டைனமைட் குச்சிகளைப் பாதுகாப்பாகச் சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர். ஏ.என்.சிவராமன் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் தானே திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு தகுதியான வீரர்களைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைத்து ஏற்பாடுகள் செய்யக் கிளம்பினார். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்த என்.இராமரத்தினம் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் கும்பகோணம் சென்றார். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஒரு தேசபக்தர் முகாமாகத் திகழ்ந்தது.
அந்தக் காலத்தில் கும்பகோணம் காங்கிரசில் தலைவராக பிரபலமாக இருந்தவர் காலம் சென்ற பந்துலு அய்யர் என்பாராகும். இவர் 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போதே நகர காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சத்தியாக்கிரகிகளுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தும், கூட்டங்களில் பேசியும் பாடுபட்டவர். இவர் பாபநாசத்தை அடுத்த திருக்கருகாவூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். அந்த நாளில் அந்த ஊரைத் திருக்களாவூர் என்றே அழைப்பார்கள். இவருடைய குமாரர்கள் சேஷு அய்யர், டி.வி.கணேசன் ஆகியோரும் மிகச் சிறந்த தேச பக்தர்கள். வீரம் செறிந்தவர்கள். கும்பகோணம் போய்ச்சேர்ந்த ஏ.என்.சிவராமன், இந்த பந்துலு அய்யரின் மூன்றாவது புதல்வரான டி.வி.கணேசன் (இவரும் தினமணியில் உதவி ஆசிரியர்) என்பாரை அழைத்துக் கொண்டு அவருடைய சொந்த கிராமமான திருக்கருகாவூர் சென்றனர். இருவரும் திட்டங்களை ரகசியமாக வகுக்க அமைதியான இந்த கிராமத்தை நாடி வந்தனர். அந்த கிராமத்தில் இவர்கள் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி எட்டு மைல் தூரத்திலுள்ள அம்மாபேட்டைக்குச் சென்றனர். அங்கு சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அப்படிச் சந்தித்த அவ்வூர் காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டு, இருவரும் திருக்கருகாவூர் திரும்பி வந்தனர். அம்மாபேட்டை, பாபநாசம் அல்லது அந்த வட்டாரத்துக்குள் எங்கு எந்த சதிவேலை நடந்தாலும், அது டி.வி.கணேசனின் மீதுதான் விழும் என்று இவர்கள் அந்தப் பகுதியில் வெடி வைக்கும் திட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் பகுதியில் எது நடந்தாலும் போலீசுக்கு முதலில் மூக்கில் வியர்ப்பது கணேசன் என்ற பெயர்தான். அந்த அளவுக்கு அவர் அந்தப் பகுதியிலும், போலீஸ் ரிக்கார்டுகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கினார். சரி, இந்தப் பகுதி வேண்டாம் என்றால், எந்த இடத்தில்தான் தங்கள் திட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வது.
புதிய திட்டம் வகுப்பதற்காகத் திருக்கருகாவூரிலிருந்து புறப்பட்டு இருவரும் சுவாமிமலைக்கு அருகிலுள்ள அவந்திபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு இலட்சுமண அய்யர் என்பார் மிகுந்த தேசபக்தி மிகுந்தவர், தைரியமானவர். அவரைப் போய் பார்க்கலாம் என்று அவர் வீட்டிற்குச் சென்றார்கள். இந்த இலட்சுமண அய்யரை விட அவருடைய தம்பி கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி மகா தைரியசாலி. உற்சாகம் மிகுந்தவர். தீவிரமான காங்கிரஸ்காரர். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர். இவரைப் பார்த்தால் என்ன என்று இவரை தொடர்பு கொண்டனர். அவந்திபுரத்தில் கூடிப் பேசிய இம்மூவரும், அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றனர்.
கும்பகோணத்தில் அப்போது சென்னை விமான நிலையத்தில் பிரதம டெலிகம்யூனிகேஷன் அதிகாரியாக விளங்கிய பொன்னுசாமி ஐயர் என்பவரின் வீடு இருந்தது. இவர்கள் மூவரும் அந்த பொன்னுசாமி ஐயரின் இல்லத்துக்குச் சென்றனர். அங்கே டெலிகம்யூனிகேஷன் அதிகாரி பொன்னுசாமி ஐயர் தவிர, குடந்தை பந்துலு ஐயரின் மூத்த மகன் சேஷு ஐயர், பந்துலு ஐயரின் தம்பி மகன் துரைசாமி ஐயர், அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், பந்துலு ஐயரின் மூன்றாவது மகனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோன்றிய திட்டத்தைக் கூறினர். குறிப்பாக இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது. அது எந்த ஆறு? எந்த பாலம்? யார் செய்வது? போன்றவற்றை அந்தந்த இடத்திற்குப் போய் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தனர். இவர்களது யோசனைப் படி தெற்கேயிருந்து சென்னைக்குப் போகும் மெயின் லைன் இந்தப் பகுதி வழியாகப் போவதாலும், ஏதாவதொரு முக்கியமான ஆற்று ரயில் பாலம் தகர்க்கப்படுமானால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படும்படி நமது செயல் இருக்க வேண்டும் என்று கணேசன் கூறிய கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். இது நல்ல யோசனை என்று அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். சரி, திட்டம் உருவாகிவிட்டது. அதை யார் அமல் படுத்துவது என்ற கேள்வி பிறந்தது.
தொடரும்……
Add comment August 11, 2009
அறிமுகம்: திரு. கோபாலன் வெங்கட்ராமன்
நமது சீர்காழி எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்பதற்கு இன்னொரு உதாரணம் அன்பர் திரு. கோபாலன் வெங்கட்ராமன் அவர்களின் வாயிலாக அறியப் பெற்றேன்.
அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ:
73 வயதான இவர், ஒரு ஒய்வு பெற்ற இந்திய ஆயுள் காப்பீட்டு (LIC) அலுவலர். தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 38 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். பாரதி இலக்கிய கழகம், என்ற பாரதி இயக்கத்தின் இலக்கிய கிளையின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் வேதாரண்ய உப்பு சத்யாக்ரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கங்களைப் பற்றிப் புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரும், இவரது நண்பர் திரு. பிரேமசாயி (இவர் திருவையாற்றில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்) அவர்களும் இணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் (அக்காலத்தில் தஞ்சை, நாகை இரண்டும் ஒரே மாவட்டமாக இருந்ததை வாசகர்கள் நினைவுகூற வேண்டும்) சுதந்திர போராட்ட தியாகிகளையும், இயக்கங்களையும் பற்றிய தொகுப்பினை வெளிக்கொணர முனைந்திருக்கிறார்கள்.
இப்படிப் பட்ட ஒரு இமாலயப் பணியை மேற்கொண்டுள்ள அவர்களுக்கு அதற்குண்டான சக்தியையும், வளத்தையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதோடு, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது சீர்காழி.காம்
இவர் சுதந்திர போராட்டத்தில் சீர்காழியின் பங்கு பற்றி ஒரு அருமையான பதிவை எழுதி எனக்கு அனுப்பியிருந்தார். அதை இரண்டொரு நாட்களில் வலையேற்றுவேன்.
அன்புடன்
-விவேக்
3 comments August 10, 2009
மீண்டும்….
நீண்ட நாட்களாக இத்தளத்தை அப்டேட் செய்ய முடியாமல் செய்துவிட்டது அமெரிக்க பொருளாதாரம். ஆம், இந்த குளோபல் ரிசஷனால் வேலை போய் பாதிக்கப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன். மீண்டும் இப்பொழுது ஒரு வேலை கிடைத்து மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.
Sirkazhi.com தளத்தை சீர்காழி அன்பர்கள் மற்றும் நண்பர் வேல்முருகன் உதவியுடன் முன்னெடுத்து செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவரவர்களது வேலைப்பளுவினால் அது முடியவில்லை.
இனியும் தாமதிக்காமல் இதை சொந்த (Personal) தளமாக மாற்றி, தொடர்ச்சியாக அப்டேட் செய்ய முடிவெடுத்துள்ளேன்.
உலகத் தொழில்நுட்ப தலைநகரமான சிலிக்கன் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு, டெக்னாலஜியைப் பற்றி எழுதாமல் எப்படி?
இனிமேல் வலையுலகில் தினம் தினம் நான் கடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கு பதிக்க எண்ணம். பார்க்கலாம் இது எதுவரை என்று.
சாம்பிளுக்கு இதோ:
நமது இந்திய மாணவன் ஒருவனது கைவண்ணத்தில் உருவான Wearable Tech Device. Minority Report என்ற டாம் க்ரூஸ் நடித்த ஆங்கில படத்தைப் பார்த்தவர்களுக்கு இது பரிச்சியமாய் இருக்கலாம். இந்த வருட Top 10 TED Talk களில் இதுவும் ஒன்று.
Add comment August 4, 2009
சீர்காழியை சிங்கப்பூராக மாற்றுவேன்
இவ்வார்த்தைகள் இந்த வருட லோக் சபா தேர்தலின்போது மணிசங்கர் அய்யர் வாயிலிருந்து வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் ‘மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்’ என்று சொல்லியே மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்று விட்டார். துபாய் நண்பர்கள் யாரவது துபாய் எப்படி இருக்கும் என்று அவருக்கு எடுத்து சொன்னால் பரவாயில்லை. இறால் பண்ணை பரபரப்பு, அது இதுவென்று அடிக்கடி தொகுதியில் அவர் பெயர் அடிபடுகிறது. நடுவில் ஒருமுறை காங்கிரஸில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக நின்று ஓரளவு நியாயமான ஓட்டு வாங்கி தோற்றும் போயிருக்கிறார். பாராளுமன்ற தொகுதி சீரமைப்பின் போது மயிலாடுதுறை தொகுதியே காலி என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதிப் பட்டியலில் மீண்டு(ம்) வந்ததில் அன்னாரது கைங்கரியம்அதிகம் என்பதால் மண்ணின் மைந்தர்களுக்கு அவர் மீது ஒரு ஸாப்ட் கார்னர் ஏற்பட்டிருக்கிறது.

ஒழுங்காக இருந்த தொகுதியை இறால் பண்ணை ஆரம்பித்து எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்கிறேன் பேர்வழி என்று விளை நிலங்களைப் பாழாக்கியதுதான் மிச்சம். இதற்கிடையில் அண்மையில் ‘சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று ஜனாதிபதியிடமிருந்து விருது வாங்கியிருக்கிறார் என்பது உச்சகட்ட தமாஷ். ஐயர் வாயிலிருந்து மந்திர வார்த்தைகள் மட்டுமல்லாமல், தந்திர வார்த்தைகளும் வரும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
-அன்புடன்
விவேக்
Add comment February 24, 2009
சீர்காழித்தமிழ்
எனக்கு நிறைய நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரத்தமிழ் வழக்குகள் உள்ளன. உ-ம் மதுரைத்தமிழ், குமரித்தமிழ், உலகப்புகழ்ப்பெற்ற சென்னைத்தமிழ் இப்படி. சீர்காழியுனுடைய தமிழ் வழக்கு தென் வட்டார வழக்குகளோடு மிகுந்த தொடர்புடையதா இல்லை வட வழக்குகளோடு தொடர்புடையதா என்று.
தமிழ் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய சீர்காழியுடன் தொடர்புடைய மூவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. சமண துறவியாக இருந்தாலும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தமிழ் அலாதியானது. சீர்காழிக்கு மிக அருகில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை மிக அழகாக விவரித்திருப்பார் புகார்க்காண்டத்தில்.
“அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால். “
இது அவருடைய தமிழுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
நம் மண்ணின் மைந்தன் ஞானசம்பந்தர் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் எழுதிய சீர்காழி பண்
“பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே. “
வைணவ ஆழ்வார்களும் “காழிச்சீராம வின்னகரத்தைப்பற்றி” பிரபந்தத்தில் பாடியுள்ளனர்.
“ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி” என்று மிக அற்புதமான பாடல் ஒன்று உண்டு பெரிய திருமொழியில்.
இப்படி அறம் வளர்த்து, திறன் வளர்த்து, தமிழ் வளர்த்த சீர்காழித்தமிழின் இன்றைய நிலை என்ன?
வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து சீர்காழியை தனது இருப்பிடமாக ஆக்கி கொண்டவர்களின் பங்கு என்ன? மற்ற வட்டார வழக்குகளின் ஆதிக்கம் எந்த அளவுக்கு சீர்காழியின்மேல் இருந்துள்ளது?
1 comment February 20, 2009
கூட்டுமுயற்சி
நமது சீர்காழி தளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருக்கும்போதிலும், அமெரிக்காவை, ஏன் உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் பொருளாதார பேயினால் வாழ்கை பற்றிய பயம் மேலோங்கி மற்ற எல்லாவற்றையும் மழுங்கடிக்க செய்து விடுகிறது. நாளுக்கு நாள் எங்கே பார்த்தாலும் Layoffs, layoffs என்று இந்தியாவில் “Slumdog Millionaire” போல, தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சனை போல ஒலித்து கொண்டேயிருக்கிறது. இதற்கிடையே வெளிநாட்டு மக்களுக்கு “ஒரு வீடு வாங்கினால், விசா இலவசம்” என்னும் புதியவொரு யோசனையை முன்வைத்து விவாதம் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த யோசனையை முன்வைத்து விவாதித்து கொண்டிருக்கிறார்கள். கொண்டேயிருக்கிறார்கள்.
இதற்கிடையே நமது ஊரைப் பற்றிய சில சுவையான சம்பவங்களை பற்றி எழுதுவதற்கு குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எழுத ஏனோ மனம் ஒப்பவில்லை. மற்ற சீர்காழி அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். இந்த தளம் ஏதோ சில பேருடைய பங்களிப்புக்காக உருவாக்கப்படவில்லை. நீங்கள் கூகுளாண்டவர் மூலமாகவோ, இல்லை எதையோ தேடி இங்கே வந்து சேர்ந்திருந்தாலோ, உங்களுக்கும் சீர்காழிக்கும் இம்மி அளவு தொடர்பிருந்தாலும் உங்களுடைய பங்களிப்பு மிக அவசியம். கூட்டு முயற்சி இல்லாமல் இத்தளத்தை முன்னெடுத்து செல்வது இயலாத காரியம். ஆகவே, உங்களுடைய அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் உங்கள் வசதிக்காக மின்னஞ்சல் முகவரி: admin@sirkazhi.com
-அன்புடன்,
விவேக்
2 comments February 12, 2009
சீர்காழி அன்பர்களுக்கு வணக்கம்
‘சீர்காழிக்கென்று ஒரு பிரத்தியேகமான வலைத்தளம் அமைத்தாலென்ன?’ என்று ஓராண்டிற்கு முன்னர் விவேக் வினவிய போது, வலைத்தளத்தின் கட்டமைப்பு, சீர்காழி அன்பர்களின் முனைப்பான பங்களிப்பு என யோசித்து பார்க்கவே மகிழ்ச்சியாயிருந்தது. அப்பொழுது orkut மோகம் உச்சத்திலிருந்தது. அவ்வலைத்தளத்தில் நம்மூருக்கான தனியினத்தில் சீர்காழி அன்பர்களின் பங்களிப்பு அதிகமிருந்தது. அதனால் பிரத்தியேக வலைத்தளத்தைப் பற்றிய பேச்சு பிற்பாடு இல்லாமல் போனது. வேறு யாரேனும் முனைப்பு காட்டியுள்ளனரா என்று சமீபத்தில் வலையில் மேய்ந்தபோது sirkali.com கிட்டியது. அதுவும் வெகு நாட்களாக கட்டமைப்பு செய்யப்படாமலிருப்பதை தளத்தின் admin-னுக்கு மின்னஞ்சலிட்டு தாமதமாகியபோதுதான் புரிந்து கொள்ளமுடிந்தது.
இதற்கு மேலும் தாமதப்படுத்தப்பட வேண்டாம் என்ற விவேக்கின் முயற்சியே இந்த sirkazhi.com. sirkali.com-ஆக இருந்தாலும் சரி, sirkazhi.com-ஆக இருந்தாலும் சரி, சீர்காழி என்றும் calm ஆகவே இருக்கும் என்பது சிறப்பு! ‘சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளூம்’ தனி நபரொருவரின் வலைப்பூ போல் ஆகி விடக்கூடாதே என்ற கவலை ஆரம்பத்தில் வரத்தான் செய்தது. இருந்தாலும் ‘A thousand mile journey starts with a single step’ என்ற சீனப்பழமொழியின் அர்த்தத்திற்கிணங்க அடி எடுத்து வைக்கிறோம். அன்பர்களின் மேலான பங்களிப்பு சீர்காழியின் முன்னேற்றம் குறித்து அதிகரிக்கும் போது, ‘தம்பட்ட‘ சாயல்கள் அடிக்கும் பகுதிகளை இங்கிருந்து நீக்க கடமைப்பட்டுள்ளோம். தங்களது மேலான கருத்துக்களை இங்கு பின்னூட்டமாக இடுங்கள்; admin@sirkazhi.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். சீர்காழி பற்றிய செய்திகளாக, புகைப்படங்களாக இருக்குமெனில் முன்னுரிமை அளிக்கப்படும்.
நன்றிகளுடன்,
வேல்முருகன்
5 comments January 29, 2009
சீர்காழி.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
தேசப்பற்று, மொழிப்பற்று மற்றும் ஊர் பற்றும் உடைய இரு வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ளது இந்த இணையதளம். உலகில் எந்த ஊருக்கும் சற்றும் குறையாத பெருமையும், வரலாறும் உடைய நம் ஊருக்கு, அந்த ஊரால் வளர்க்கப்பட்ட இரு நபர்கள் காட்டும் நன்றியே இந்த தளம்.
இனிவரும் நாட்களில் சீர்காழியோடு எங்களுக்கு இருக்கும் தொடர்பு, அது ஆரம்பித்த விதம், எங்களை செதுக்கிய மனிதர்கள், வாழ்கையை மாற்றிய சம்பவங்கள், அதன் மூலம் கற்று கொண்ட பாடங்கள், இன்றைய நிலைக்கான அன்றைய வித்துக்கள் மற்றும் இன்ன பிற சுவையான நிகழ்வுகளோடு உங்களை மீண்டும் சந்திப்போம்.
அயல் நாடுகளில் வாழும் சீர்காழி அன்பர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமும் உள்ளது. இந்த தளத்தை பயனுள்ளதாக ஆக்க உங்களுடைய கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. தொடர்பு: admin@sirkazhi.com
-அன்புடன்
விவேக்
12 comments January 24, 2009






