சீர்காழி சதி வழக்கு-பாகம்-1
August 11, 2009 at 5:15 am Vivek Leave a comment
தமிழகத்தில் 1942 ஆகஸ்ட் புரட்சியின்போது தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு அடுத்ததாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவது இந்த சீர்காழி சதி வழக்கு. 1942 ஆகஸ்ட்டில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானமும், அதனையடுத்த தேசத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையும் தொடர்ந்து வடநாடு முழுவதும் தீவிரமான போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாடு அவர்களுக்குப் பின் தங்கியது இல்லை என்று கூறும் வகையில் இங்கும் பல தீவிரவாதப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடக்கத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வந்த காங்கிரசார்களை, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளைக்காரனின் பேச்சு விழித்து எழச்செய்து விட்டது.
இரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடொன்றில் பேசுகையில் சென்னை கவர்னர் “இந்தியாவின் இதர பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், இரயில்வே பாலங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகள் நடைபெற்று வரும்போது, சென்னை மாகாணம் மட்டும் அப்படிப்பட்ட நாச வேலைகள் எதுவும் நடைபெறாமல் அமைதியாகவே இருக்கிறது என்பது சென்னை மாகாணத்துக்குப் பெருமை, ஆகவே இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி” என்று கூறினார். இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதைப் படித்த தேசபக்தர்களுக்கு, கவர்னரின் பேச்சு ஒரு சவாலாக இருந்தது போலும். ஓகோ! வட இந்திய மக்களைப் போல தென்னிந்திய மக்கள் தேச உணர்வில் பின் தங்கியவர்கள் என்பது போல அல்லவா இவர் பேசியிருக்கிறார். நம் தேசபக்தியையும், வட இந்திய மக்களைப் போலவே நாமும் காண்பித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது போலும். சென்னை மாகாண கவர்னரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து சென்னை மாகாணம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இவைகள் தோன்றலாயின.
அந்த வரிசையில் சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம். சீர்காழிக்கு அருகில், புகைவண்டி நிலையத்திற்கு மிக அருகில் ஒரு உப்பனாறு உண்டு. அந்த உப்பனாற்றின் மீதுள்ள ரயில்வே பாலத்திற்கு வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டி 8 பேர் மீது இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்குதான் சீர்காழி சதி வழக்கு என்று பெயர் பெற்றது.
அந்த எட்டு பேரின் பெயர்கள் வருமாறு:-
1. சென்னை தினமணி உதவி ஆசிரியர் என்.ராமரத்தினம்.
2. சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபர் ஆர்.சுப்பராயன்
3. கும்பகோணம் பந்துலு ஐயரின் முதல் மகன் வி.சேஷு ஐயர்
4. அவந்திபுரம் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி
5. கும்பகோணம் பந்துலு ஐயரின் 3ஆவது மகன் டி.வி.கணேசன், தினமணி உதவி ஆசிரியர்.
6. சீர்காழி வெங்கடேசன்
7. சீர்காழி வெங்கட்டராமன்
8. சீர்காழி சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் பல படித்த தேசபக்தி மிகுந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் கொண்டனர். எத்தனை தலைவர்கள், அத்தனை பேரும் அஹிம்சை, சத்தியம் என்று தங்கள் போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்கள். அவர்களைப் பிடித்து எங்கிருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை செய்யும் இந்த வெள்ளை அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினர். இவர்களோடு தேசபக்த பாமர மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தனர். அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்வதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றிய சிந்தனையே அந்த இளைஞர்களுக்கு இல்லை. நம் நாடு, நம் மக்கள், நம் தலைவர்கள், நமக்கு சுதந்திரம், அடக்குமுறையைக் கையாளும் வெள்ளையனுக்கு சரியான பாடம் இதுதான் அவர்கள் மனதில் ஓடிய எண்ண அலைகள். அப்படிப்பட்ட தியாக மனம் படைத்த தஞ்சை மாவட்ட படித்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செயல்படத் துடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நாளில் மிகப் பிரபலமான பத்திரிகைகளாக விளங்கிய, ஆங்கில ஏடு “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்”, தமிழ் நாளேடு “தினமணி” இவற்றின் அதிபராக விளங்கியவர் திரு. இராம்நாத் கோயங்கா என்பவர். அந்த பத்திரிகைகளில் தினமணியில் பணியாற்றியவரும் பின்னர் அதன் ஆசிரியராகவும் இருந்தவர் மேதை திரு ஏ.என்.சிவராமன் அவர்கள். இவர்களோடு தினமணி என்.இராமரத்தினம் ஆகியோர் ஒன்று கலந்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதியிலுள்ள ஏதாவதொரு பாலத்துக்கு வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்கு முதலில் வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொள்ள வேண்டுமே, என்ன செய்வது? இராம்நாத் கோயங்காவுக்கு நாடு முழுவதிலும் நல்ல செல்வாக்கு உண்டு. அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி கோயங்காவும், சிவராமனும் ஆந்திரா, ஒரிசா எல்லையிலுள்ள செல்லூர் எனும் இடத்துக்கு ரகசியமாகச் சென்று அங்கிருந்த மைக்கா சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலருக்குப் பணம் கொடுத்து, அவர்கள் சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டுக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். ஒரு டைனமைட் என்பது சாக்பீஸ் அளவுக்கு இருக்கும்.
இந்த டைனமைட் குச்சிகளைப் பாதுகாப்பாகச் சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர். ஏ.என்.சிவராமன் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் தானே திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு தகுதியான வீரர்களைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைத்து ஏற்பாடுகள் செய்யக் கிளம்பினார். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்த என்.இராமரத்தினம் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் கும்பகோணம் சென்றார். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஒரு தேசபக்தர் முகாமாகத் திகழ்ந்தது.
அந்தக் காலத்தில் கும்பகோணம் காங்கிரசில் தலைவராக பிரபலமாக இருந்தவர் காலம் சென்ற பந்துலு அய்யர் என்பாராகும். இவர் 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போதே நகர காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சத்தியாக்கிரகிகளுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தும், கூட்டங்களில் பேசியும் பாடுபட்டவர். இவர் பாபநாசத்தை அடுத்த திருக்கருகாவூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். அந்த நாளில் அந்த ஊரைத் திருக்களாவூர் என்றே அழைப்பார்கள். இவருடைய குமாரர்கள் சேஷு அய்யர், டி.வி.கணேசன் ஆகியோரும் மிகச் சிறந்த தேச பக்தர்கள். வீரம் செறிந்தவர்கள். கும்பகோணம் போய்ச்சேர்ந்த ஏ.என்.சிவராமன், இந்த பந்துலு அய்யரின் மூன்றாவது புதல்வரான டி.வி.கணேசன் (இவரும் தினமணியில் உதவி ஆசிரியர்) என்பாரை அழைத்துக் கொண்டு அவருடைய சொந்த கிராமமான திருக்கருகாவூர் சென்றனர். இருவரும் திட்டங்களை ரகசியமாக வகுக்க அமைதியான இந்த கிராமத்தை நாடி வந்தனர். அந்த கிராமத்தில் இவர்கள் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி எட்டு மைல் தூரத்திலுள்ள அம்மாபேட்டைக்குச் சென்றனர். அங்கு சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அப்படிச் சந்தித்த அவ்வூர் காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டு, இருவரும் திருக்கருகாவூர் திரும்பி வந்தனர். அம்மாபேட்டை, பாபநாசம் அல்லது அந்த வட்டாரத்துக்குள் எங்கு எந்த சதிவேலை நடந்தாலும், அது டி.வி.கணேசனின் மீதுதான் விழும் என்று இவர்கள் அந்தப் பகுதியில் வெடி வைக்கும் திட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் பகுதியில் எது நடந்தாலும் போலீசுக்கு முதலில் மூக்கில் வியர்ப்பது கணேசன் என்ற பெயர்தான். அந்த அளவுக்கு அவர் அந்தப் பகுதியிலும், போலீஸ் ரிக்கார்டுகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கினார். சரி, இந்தப் பகுதி வேண்டாம் என்றால், எந்த இடத்தில்தான் தங்கள் திட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வது.
புதிய திட்டம் வகுப்பதற்காகத் திருக்கருகாவூரிலிருந்து புறப்பட்டு இருவரும் சுவாமிமலைக்கு அருகிலுள்ள அவந்திபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு இலட்சுமண அய்யர் என்பார் மிகுந்த தேசபக்தி மிகுந்தவர், தைரியமானவர். அவரைப் போய் பார்க்கலாம் என்று அவர் வீட்டிற்குச் சென்றார்கள். இந்த இலட்சுமண அய்யரை விட அவருடைய தம்பி கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி மகா தைரியசாலி. உற்சாகம் மிகுந்தவர். தீவிரமான காங்கிரஸ்காரர். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர். இவரைப் பார்த்தால் என்ன என்று இவரை தொடர்பு கொண்டனர். அவந்திபுரத்தில் கூடிப் பேசிய இம்மூவரும், அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றனர்.
கும்பகோணத்தில் அப்போது சென்னை விமான நிலையத்தில் பிரதம டெலிகம்யூனிகேஷன் அதிகாரியாக விளங்கிய பொன்னுசாமி ஐயர் என்பவரின் வீடு இருந்தது. இவர்கள் மூவரும் அந்த பொன்னுசாமி ஐயரின் இல்லத்துக்குச் சென்றனர். அங்கே டெலிகம்யூனிகேஷன் அதிகாரி பொன்னுசாமி ஐயர் தவிர, குடந்தை பந்துலு ஐயரின் மூத்த மகன் சேஷு ஐயர், பந்துலு ஐயரின் தம்பி மகன் துரைசாமி ஐயர், அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், பந்துலு ஐயரின் மூன்றாவது மகனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோன்றிய திட்டத்தைக் கூறினர். குறிப்பாக இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது. அது எந்த ஆறு? எந்த பாலம்? யார் செய்வது? போன்றவற்றை அந்தந்த இடத்திற்குப் போய் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தனர். இவர்களது யோசனைப் படி தெற்கேயிருந்து சென்னைக்குப் போகும் மெயின் லைன் இந்தப் பகுதி வழியாகப் போவதாலும், ஏதாவதொரு முக்கியமான ஆற்று ரயில் பாலம் தகர்க்கப்படுமானால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படும்படி நமது செயல் இருக்க வேண்டும் என்று கணேசன் கூறிய கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். இது நல்ல யோசனை என்று அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். சரி, திட்டம் உருவாகிவிட்டது. அதை யார் அமல் படுத்துவது என்ற கேள்வி பிறந்தது.
தொடரும்……
Entry filed under: அரசியல், வரலாறு. Tags: Freedon Fighting, Uppanar.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed